பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கோடிக்கணக்கான ரூபாய் கேட்டு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. வாட்ஸ் வாய்ஸ் நோட் மூலம் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது.. இதனால் மும்பை போலீசார் அவரது வீட்டிற்கு வெளியே பாதுகாப்பை அதிகரித்து அனுப்புநரைக் கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் மும்பையில் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல் வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
ரன்வீர் சிங் கடைசியாக 2025 ஆம் ஆண்டு ஆதித்யா தர் இயக்கிய துரந்தர் என்ற ஸ்பை திரில்லர் படத்தில் நடித்தார். டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், உலகளவில் ரூ.1,305 கோடிக்கு மேல் வசூலித்து, மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது. இந்தியில் மட்டும் ரூ.1,000 கோடியை உள்நாட்டு நிகர வசூலில் தாண்டிய முதல் இந்தியப் படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது.. ரகசிய உளவுத்துறை நடவடிக்கைகளை மையமாகக் கொண்ட கதையில் ரன்வீர் சிங் ஹம்சா அலி மசாரி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே, இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து பேர் – அமன் மரோட் (27), ஆதித்யா கயாகி (19), சித்தார்த் யென்புரே (20), சமர்த் போமாஜி (18) மற்றும் ஸ்வப்னில் சகாத் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த சுபம் லோங்கர் தேடப்படும் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உயர்தர நாட்டுத் தயாரிப்பு ஆயுதத்தைப் பயன்படுத்தியதாகவும், 7.62 மிமீ வெடிமருந்துகளில் ஐந்து சுற்றுகளைச் சுட்டதாகவும் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட வெடிமருந்து பெட்டிகள் மற்றும் தடயவியல் அறிக்கைகளின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..



