சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. விமான நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், விமான நிலையத்தின் குப்பைத் தொட்டிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெடித்துச் சிதறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள், இயக்குநருக்கு தகவல் அளிக்க, நள்ளிரவில் விமான நிலைய அவசரகால பாதுகாப்பு குழுவின் கூட்டம் நடந்தது. பின்னர் உயர் அதிகாரிகள், பிசிஏஎஸ், சிஐஎஸ்எப் அதிகாரிகள், விமான நிறுவனத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், விமான நிலையம் முழுவதையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து, சோதனைகளை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, நள்ளிரவு முதல் சென்னை விமான நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர். விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன், பயணிகளுக்கு கூடுதலாக ஒரு சோதனை நடத்தப்பட்டது.
விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டிகள், பார்சல்கள், பயணிகள் உடைமைகள் என ஒவ்வொன்றையும் வெடிகுண்டு நிபுணர்கள் துருவித் துருவி ஆராய்ந்தனர். நள்ளிரவில் தொடங்கிய இந்த சோதனைகள் விடிய விடிய நீடித்தன. இருப்பினும், எந்தவிதமான வெடிகுண்டுகளோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை.
இதன் காரணமாக, இது வழக்கம் போல வரும் வெடிகுண்டு புரளி தான் என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, சென்னை விமான நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, இந்த மிரட்டலை விடுத்த மர்ம நபர்கள் அல்லது கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Read More : “நீங்கள் காஸா அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தால், எல்லாம் பாழாகிவிடும்”!. ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை!