பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கும், அவரது மகன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சென்னை இல்லத்திற்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் அமைந்துள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக அறியப்பட்டதும், சிறப்பு பாதுகாப்பு படையினர் உடனே விரைந்து சென்று மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
அதேபோல், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்திலும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவும் போலீசாரும் இடத்தை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற சோதனையிற்குப் பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஓய்ந்தது.
கடந்த சில நாட்களாக மத தலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது ஏன் தெரியுமா..? பலருக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்..!



