நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சௌந்தர்யா, காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே வளாகத்தில் உள்ள வாடகை வீட்டில், தினேஷ் என்பவரும் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். வேலை தேடி வந்த இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இரு குடும்பத்தாருக்கும் இவர்களின் காதல் தெரிந்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு எளிமையான முறையில் இவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தினேஷ், தனது காதலி சௌந்தர்யாவின் மீதான பேரன்பை ‘என் தேடலில் கிடைத்த மிகச்சிறந்த பொக்கிஷம் நீ மட்டுமே’ என்றும், ‘உன்னுடன் வாழ நூறு ஜென்மம் கூடப் போதாது’ என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டு, இளம் ஜோடிகளுக்கு ஒரு லட்சிய காதலாகத் திகழ்ந்தார். கையில் காதலியின் பெயரைப் பச்சை குத்திப் பதிவிட்ட அவர், ஏராளமான லைக்ஸ்களையும் பெற்றார்.
ஆனால், இந்த அதீத அன்பின் மறுபக்கத்தில் தினேஷின் Over Possessiveness இருந்துள்ளது. சௌந்தர்யா வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் சாதாரணமாகப் பழகுவதையும், சிரித்துப் பேசுவதையும் கூட தினேஷால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரது உரிமை உணர்வு எல்லை மீறியதை சௌந்தர்யா விரும்பவில்லை. இதனால் ‘நூறு ஜென்மம்’ என்று சொன்னவனுடன் ‘நூறு நாட்கள் கூட சேர்ந்து வாழ முடியாது’ என்ற முடிவுக்கு அவர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் திருமணப் பேச்சுகளை அவர் தள்ளி வைத்ததாகத் தெரிகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ், சௌந்தர்யா வேறொரு ஆண் நண்பருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். தினேஷின் நடத்தை சில சமயங்களில் நன்றாக இருப்பதும், அடுத்த நொடியே ‘சைக்கோ’ போல மாறுவதும் சௌந்தர்யாவை அச்சுறுத்தியுள்ளது.
சம்பவத்தன்று, சௌந்தர்யாவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்ற தினேஷ், உணர்ச்சி ரீதியான பேச்சுகளால் உடலுறவுக்கு வற்புறுத்தி, திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அப்போது சௌந்தர்யா அவரது குறைகளைச் சுட்டிக்காட்டியதால், ஆத்திரமடைந்த தினேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சௌந்தர்யாவின் உடலில் 21 இடங்களில் சரமாரியாகக் குத்தினார். ரத்தவெள்ளத்தில் கிடந்த சௌந்தர்யா உயிருக்குப் போராடியபோது, தினேஷ் அவர் வாயில் துணியை அடைத்து, கழுத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
பின்னர், அங்கிருந்து தப்பிய தினேஷ், பின்னர் நாகப்பட்டினம் சென்று காவல்துறையிடம் சரணடைந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தினேஷின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.