திராவிட இயக்கத்தின் மூத்த தூண்களில் ஒருவரும், ‘மொழிப்போர் தளபதி’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் (92), வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தஞ்சாவூர் பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்த இந்தத் செய்தி, திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல். கணேசன், பேரறிஞர் அண்ணா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் மிக நெருக்கமான நட்பு கொண்டவர். திராவிடக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்ட இவர், 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று போரிட்டவர். அதன்பின்னர், நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, மிசா (MISA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது அரசியல் வாழ்வில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA), நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (MP) பதவி வகித்து மக்கள் பணியாற்றியுள்ளார். 1980-களில் திமுக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், சிறந்த நாடாளுமன்றவாதியாகத் திகழ்ந்தார். திராவிட இயக்க வரலாற்றின் ஒரு சகாப்தமாக விளங்கிய எல். கணேசனின் மறைவு, தமிழக அரசியலுக்கும், குறிப்பாக தஞ்சை மண்ணுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது.
Read More : FLASH | “வதந்திகளை பரப்ப வேண்டாம்”..!! பாரதிராஜா உடல்நிலை குறித்து வெளியானது மருத்துவ அறிக்கை..!!



