தமிழ்நாட்டில் சமீபகாலமாக தொடர்கதையாகி வரும் பேருந்து விபத்துகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நிகழும் இத்தகைய கோர விபத்துகளில் அப்பாவிப் பயணிகள் உயிரிழப்பது வேதனையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ஒரு தனியார் பேருந்து விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து கரூர் நோக்கி 16 பயணிகளுடன் ஒரு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற பேருந்து சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜியாவுதீன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா அல்லது பேருந்தின் வேகமே விபத்துக்குக் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது
Read More : உங்கள் மகளின் திருமண கவலையை தீர்க்கும் ஜாக்பாட் திட்டம்..!! வட்டி மட்டுமே ரூ.50,00,000 கிடைக்கும்..!!



