திருப்புவனம் அருகே காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்த அஜித் மரண வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது..
திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த வழக்கில் 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது..
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசை கடுமையாக சாடியது.. இதுகுறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை மாவட்ட நீதிபதி இந்த வழக்கை நேரடியாக விசாரிப்பார் என்றும் உத்தரவிட்டது. அதன்படி மதுரை மாவட்ட நீதிபதி இன்று தனது விசாரணையை தொடங்கினார்.
நகை திருட்டுப் போனதாக கூறி நிகிதா என்ற பெண் புகாரளித்ததன் பேரில் தான் காவல்துறையினர் அஜித்தை விசாரணை அழைத்து விசாரித்துள்ளனர். ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாமல் தான் விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடூரத்தை காவல்துறையினர் அரங்கேற்றி உள்ளனர். இந்த விசாரணையில் அஜித் நகையை திருடவில்லை என்று ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், நன்றாக அடித்து உண்மையை வாங்குங்கள் என்ற ஒரு உயரதிகாரி உத்தரவின் பேரில் தான் போலீசார் அஜித்தை கடுமையாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து நேற்று நீதிமன்றமும் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து தமிழக அரசை சாடியது.. இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் திருப்புவனம் அருகே காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்த அஜித்தின் வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.. அதாவது அஜித் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளது.. வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக 2011-ம் ஆண்டு நிகிதா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.. இதுதொடர்பான அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று நிகிதா மோசடி செய்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவாகி உள்ளது. பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட போது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியதும் தற்போது தெரியவந்துள்ளது. நிகிதா குடும்பம் ரூ.16 லட்சம் வரை மோசடி செய்து, தலைமறைவானதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நிகிதா மீதான இந்த மோசடி புகார் தொடர்பான இந்த தகவல் வழக்கு விசாரணையில் போக்கை மாற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகிதா மற்றும் அவரின் பின்னணி குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது..
Read More : அடித்து விசாரணை நடத்த சொன்ன IAS அதிகாரி யார்..? கொலையை மூடிமறைக்க திமுக முயற்சி!!! அன்புமணி ஆவேசம்…!