தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஞான சேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் வாயிலாக முதல்கட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளது என அந்த குற்றப்பத்திரிகையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஞானசேகரனின் செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் ஞானசேகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இவ்வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் 29 சாட்சிகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இருதரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, வழக்கின் தீர்ப்பை வரும் மே 28ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும், அவர் மீது இரக்கம் காட்ட கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் முன்வைக்கப்பட்டது. அதேசமயம் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஞானசேகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வாசித்தார். தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ராஜலட்சுமி அறிவித்துள்ளார்.
Read more: Gold Rate: மளமளவென சரிந்த தங்கத்தின் விலை.. ஒரு கிராம் கோல்டு எவ்வளவுனு பாருங்க..!!