தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆணவப் படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் பிறந்த மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது.. ஆனால் இடைக்காலத்தில் புகுந்தவர்களால் சாதி வேறுபாடு வந்தது.. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை உருவாக்கவே பல இயக்கங்கள் போராடி மாற்றம் கொண்டு வந்தன.. திராவிட இயக்கங்களின் முயற்சியால் தான் இனமும் மொழியும் தான் நமது அடையாளம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சீர்திருத்த சிந்தனை தமிழ் மண்ணில் அதிகம் விதைப்பட்டது.. உலகம் அறிவுமயமாகி வரும் சூழலில் அன்பு மயமாக வேண்டும்.. ஆனால் இந்த சாதி அதனை தடுக்கிறது.. இது நம்மை வாட்டுகிறது.. எந்த காரணத்திற்காகவும் ஒரு உயிரைக் கொல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக சமூக நீதி விடுதி என மாற்றப்பட்டது..
ஆணவ படுகொலைக்கு சாதியை தாண்டி பல காரணங்கள் உள்ளன.. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆணவக் கொலைக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.. அவர்கள் எதன் பொருட்டும் தப்பி ஓடக் கூடாது எனவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் சட்ட வல்லுனர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் கொண்ட ஆணையம் அமைக்கப்படும்.. இந்த ஆணையம் அனைத்து தரப்பின் பரிந்துரைகளை பெற்று அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும்.. அதன் அடிப்படையில் தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை இயற்றும்.” என்று தெரிவித்தார்..



