மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இன்று காலை 5.30 மணியளவில் இந்த புயல் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் வலுவடையும் எனவும் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது..
இதனிடையே குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல்–இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தெற்கு இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
மேலும் “ இதன் காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28-ம் தேதி கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 29-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 30-ம் தேதி வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், டிச.1-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 29-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..



