தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் நீதிபதிக்கு காட்டப்பட்டது.. இதை பார்த்த நீதிபதி சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனையளக்கிறது..
மேலும் தவெகவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி “ கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருக்க முடியாது.. யார் மீது தவறு உள்ளதோ அவர் மீது நடவடிக்கை வேண்டும்.. தவெக என்ன மாதிரியான கட்சி..? மக்களை கைவிட்டு தலைவரும் பொறுப்பாளர்களும் பொறுப்பற்ற முறையில் வெளியேறி உள்ளனர்.. தங்கள் தொண்டர்களை விட்டு விட்டார்கள்.. தலைமைத்துவ பண்பே இல்லை.. சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவுக்கு கடும் கண்டனம்..” என்று நீதிபதி காட்டமாக பேசினார்..
அப்போது தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலாளர் ட்விட்டரில் போட்ட பதிவு நீதிபதியிடம் காட்டப்பட்டது.. அப்போது அவரின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, இதுபோன்ற வார்த்தையை எப்படி பயன்படுத்த முடியும்? ஒரு சிறிய வார்த்தை கூட பெரிய வன்முறைக்கு காரணமாகிவிடும்.. ஆதவ் அர்ஜூனா என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என்று கேள்வி எழுப்பினார்.. நீதிமன்றம் ஏதேனும் உத்தரவிட வேண்டும் என காவல்துறையினர் காத்திருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் இந்த பதிவுக்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரிக்க வேண்டும்.. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்..
ஆதவ் அர்ஜுனா கடந்த 30-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் ஒரு பதிவை போட்டிருந்தார்.. அவரின் பதிவில் “ ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்றும், நேபாளம், இலங்கையை போல் தமிழ்நாட்டிலும் புரட்சி வெடிக்க வேண்டும் எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே உடனடியாக அவர் தனது பதிவை நீக்கிவிட்டார்..
எனினும் இதுபோன்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அவர் மீது புகாரளிக்கப்பட்டது.. தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



