ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே யலமஞ்சிலி பகுதியில், நேற்று நள்ளிரவு டாடா நகர் – எர்ணாகுளம் விரைவு ரயிலில் (Express Train) ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்ததில், ஒரு பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.
நள்ளிரவு சுமார் 12.45 மணி அளவில் ரயிலில் தீப்பிடித்ததாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. விபத்துக்குள்ளான ஒரு பெட்டியில் 82 பயணிகளும், மற்றொரு பெட்டியில் 76 பயணிகளும் இருந்தனர். தீ மளமளவெனப் பரவியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பியவாறு ரயிலை விட்டு வெளியேறினர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக ‘B1’ எனும் குளிர்சாதனப் பெட்டியில் (AC Coach) பயணம் செய்த சந்திரசேகர் சுந்தரம் என்பவர் தீயில் சிக்கி உயிரிழந்தார். மீட்புப் பணியின் போது அவரது உடல் மீட்கப்பட்டது.
விபத்து நடந்தவுடன், தீப்பிடித்த இரண்டு பெட்டிகளும் ரயிலில் இருந்து பாதுகாப்பாக பிரிக்கப்பட்டன. அதன் பின்னர் மற்ற பெட்டிகளுடன் ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்த மற்ற பயணிகளை அவர்களது இடங்களுக்கு அனுப்பி வைக்க தேவையான மாற்று ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது. இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய 2 தடயவியல் குழுக்கள் (Forensic Teams) சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வை தொடங்கியுள்ளன.
Read More : FLASH | நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!! என்ன ஆச்சு..? அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் கவலை..!!



