துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில், துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வைகோ நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியானது.. மேலும் திமுக மூத்த தலைவரும், எம்.பியுமான திருச்சி சிவா அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இவருக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
79 வயதான சுதர்சன் ரெட்டி, ஆந்திர மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 2007 முதல் 2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஆவார்.