கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் விசாரணை மேற்கொண்டு வந்தது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டது.. அதன்படி இந்த வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
கரூர் சிபிஐ அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகள், வீடியோகிராபர்கள், ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள், உரிமையாளர்கள் என 306 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சிபிஐ 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டது..
இந்த சூழலில் கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல்துறையினர், தவெக நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டது.. அதன்படி, கடந்த 30-ம் தேதி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் உள்ளிட்டோர் ஆஜராகினர்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகள் ஆஜராகினர்.. அவர்களிடம் தொடர்ந்து 2 நாட்கள் விசாரணை நடைபெற்றது.. இதையடுத்து விஜய்க்கு கூட சம்மன் அனுப்பப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் கரூர் பெருந்துயரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 12-ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. விஜய்யிடம் கரூர் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்படும்.. அதற்கு விஜய் அளிக்கும் பதிலை பொறுத்து தான் அவரிடம் எத்தனை நாட்கள் விசாரணை நடக்கும் என்பது தெரியவரும்..



