41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது.
இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு மாநில அரசின் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டது.
கரூர் கூட்ட நெரிசலில் மகனை இழந்த தந்தை ஒருவர் சிபிஐ விசாரணை கோரிய மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.. அப்போது மனுதாரர் தரப்பு, கரூர் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாலும் காவல்துறையினர் தடியடி நடத்தியதாலும் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. கரூரில் செருப்பு வீசப்பட்டது, அப்போது கூட கூட்ட நெரிசல் ஏற்படவில்லை.. ஆனால் காவல்துறை தடியடி நடத்திய பின்னர் தான் பலர் ஓடினர். அதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது..
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்படப் போகிறது என்று மதியம் 3.15 மணிக்கே திமுக உறுப்பினர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். பதிவு போட்டவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்.. எனவே மாநில அரசு அதிகாரிகளின் விசாரணையில் நம்பிக்கை இல்லை.. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
ஒரே இரவில் அனைத்து உடல்களும் உடற்கூறாய்வு செய்யப்பட்டது குறித்தும் மனுதாரர் சந்தேகம் எழுப்பினார்.. பாதிக்கப்பட்டவர் கோரியதாலேயே இரவில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்தது.. அப்போது அனைத்து உடல்களையும் உடற்கூறாய்வு செய்யும் கட்டமைப்பு கரூர் அரசு மருத்துவமனையில் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..
கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது 600 போலீசார் பாதுகாப்புக்கு இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் ஒரு போலீசாரை கூட பார்க்க முடியவில்லை என்று மனுதாரர் தரப்பு கூறியது.. ஒரு போலீசார் கூட காயமடையவில்லை என்பதற்காக சிபிஐ விசாரணை கோருகிறாரா என்று அரசு தரப்பு வாதிட்டது.
மேலும் நண்பகல் 12 மணிக்கு வருவதாக அறிவித்த விஜய் இரவு 7 மணிக்கு தான் வந்தார்.. காலை முதல் அவரை பார்க்க காத்திருந்த தொண்டர்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் சோர்வடைந்தனர்.. எனவே விஜய் வரும் ஏற்கனவே சோர்வாக இருந்த தொண்டர்கள் மயங்கி விழுந்தனர்.. அப்போது விஜய் தனது வாகனத்தில் இருந்து தண்ணீர் பாட்டீல்களை வீசினார் என்று அரசு தரப்பு தெரிவித்தது.
அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு அனுமதி கோரியது.. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கினர்.. அனைத்து மனுக்கள் மற்றும் பிரமாண பத்திரத்தை பார்த்த பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்..