பாரத் அரிசி, கோதுமை மாவு, பாரத் பருப்பு உள்ளிட்டவை குறைந்த விலையில் மத்திய அரசால் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு காரணம் நாடு முழுவதும் உயர்த்தப்பட்ட அரிசியின் விலைதான்.
அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக மலிவு விலையில் அரிசி விற்பனையை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாரத் அரிசி என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு கிலோ 29 ரூபாய்தான்.
மொத்தம் 5 லட்சம் டன் பாரத் அரிசி விற்கப்படுகிறது. இந்த 5 லட்சம் டன்னில் தமிழகத்திற்கு 22 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 5 கிலோ பாக்கெட் மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கும். இந்த அரிசியை விற்பனை செய்ய தேசிய வேளாண் கூட்டுறவு சங்கம். தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டகசாலை, கேந்திரிய பந்தர் ஆகியவற்றுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வேன்களில் பாரத் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. பாரத் அரிசி , பாரத் கோதுமை மாவு போல் பாரத் பருப்பும் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில் பாரத் அரிசி, கோதுமை மாவு உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ரயில்வே வாரியத்தின் பயணியர் வர்த்தக பிரிவு தலைமை இயக்குநர் நீரஜ் சர்மா கடந்த 15 ஆம் தேதி பிறப்பித்திருந்தார். அரிசி விலை ரூ 29க்கும் கோதுமை கிலோ 27.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரயில் நிலையங்களில் இவற்றை விற்பதற்கு ஏற்ற இடங்களை அந்தந்த கோட்ட மேலாளர்கள் ஒப்புதலுடன் தேர்வு செய்ய வேண்டும்.
விற்பனை செய்யும் வேன்களில் விளம்பர பேனர் வைக்க வேண்டும். விற்பனை செய்ய மைக் செட் மூலம் அனுமதி கிடையாது. இந்த அரிசி, கோதுமை விற்பனைக்காக எந்த கட்டணமோ விற்பனை வேன் நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணமோ ரயில்வே துறை வசூலிக்காது. கூட்ட நெரிசல் உள்ள ரயில் நிலையங்களை தவிர்த்து மற்ற ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் விற்பனை செய்யலாம்.
மாலையில் இரண்டு மணி நேரம் ரயில் நிலையங்களின் நுழைவு பகுதியில் இந்த விற்பனை நடைபெறும். இன்னும் எந்தெந்த ரயில் நிலையங்கள் என்பதை முடிவு செய்துவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.