உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவன், குழந்தைகளின் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி கான்பூர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, 10 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுவன் மீது, போக்சோ சட்டத்தின்கீழ் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அச்சிறுவன் அம்மாவட்டத்தின் சிறார் நீதிமன்றக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ள தகவல்களின்படி, சிறுமி தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் என தெரிகிறது. சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்தபோது இச்சம்பவம் நடந்திருப்பதாகவும், வெளியே சென்ற சிறுமியின் தாய்-தந்தை வீட்டுக்கு திரும்பியபோது சிறுமி அழுது கொண்டிருந்ததாகவும், அவரிடம் விசாரிக்கையில் சிறுமியே குற்றச்சம்பவம் தொடர்பாக தகவல் சொன்னதாகவும் தெரிகிறது. அதைத்தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில் சிறுவனிடம் விசாரித்தபோது, தான் மொபைலில் ஆபாச படம் பார்த்ததையும், அதன்பின் சிறுமியிடம் அத்துமீறியதையும் ஒப்புக்கொண்டுள்ளான். இச்சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 10 வயது சிறுவனொருவன், பாலியல் வன்கொடுமை குற்றத்தை இழைத்திருப்பதும், அதன் பின்னணியாக மொபைல் ஃபோன் இருந்ததாக குறிப்பிட்டிருப்பதும் அதிர்ச்சியையே பலருக்கும் கொடுத்துள்ளது. சிறுவர் சிறுமியரிடையே பெற்றோர் மொபைல் ஃபோன் தரும்போது, `பேரண்டல் கண்ட்ரோல்’ கொடுக்க வேண்டும் – குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க வேண்டும், ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகரொருவர் இருக்க வேண்டும், பெற்றோரிடையே குழந்தை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.