100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.4,034 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று கனிமொழி எம்பி பேசுகையில், ”தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 91 லட்சம் பேர், இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை ரூ.2,985 கோடி. இந்த தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதனால், கடந்த 5 மாதங்களாக 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் தரப்படவில்லை. எனவே, இத்திட்டத்திற்கான மொத்த நிலுவைத் தொகை ரூ.4,034 கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்.
இது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின், கடந்த ஜனவரி 13ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும், இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. ஆகையால், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழே தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தொகையை உடனே வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.