கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கிறது. இத்திட்டம் மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும்.
18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெறவும் திறன்சாரா வேலை பெறவும் உரிமை உண்டு. கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நலிவுற்ற பிரிவினருக்கான தனிநபர் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள், ஆதார் எண்ணை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இணைக்காத பட்சத்தில், கட்டாயம் ஊதியம் வழங்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாவது முறையாக கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதுவே கடைசி தேதி என சொல்லப்படுகிறது. இதனால், பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.