நாடு முழுதும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை கண்காணிப்பதற்கு, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கிராம வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வலியுறுத்தினார். இதையடுத்து, நாடு முழுதும் உள்ள கிராமங்களில் நடக்கும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளைக் கண்காணிக்க, ட்ரோன்களை பயன்படுத்த மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் முடிவு செய்தது. இதுகுறித்து, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கிராம வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்தலாம். அதேபோல குறைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்படும் குறைதீர்ப்பாளர்களும் இதைப் பயன்படுத்தலாம்.
மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து, ட்ரோன்கள் வாங்க செலவு செய்து கொள்ளலாம். இதற்கென கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ட்ரோன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களை நியமிக்க வேண்டும். இவற்றில் உயர்தர கேமரா இருப்பது அவசியம். ட்ரோன் வாயிலாக எடுக்கப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை, தேசிய வேலை உறுதித் திட்ட மென்பொருளில் பகிர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.