அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலியானதை அடுத்து அதிமுகவைச் சேர்ந்த சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பில் 100 அடி கொடிக்கம்பம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கொடி கம்பம் பழுதின் காரணமாக நேற்று மாலை மதுராந்தகம் அதிமுக நிர்வாகி சரவணன் தலைமையில் கிரேன் மூலம் கீழே இறக்கி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து அருகிலிருந்த மதுராந்தகம் சூரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்பவர் மீது விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், போலீசார் செல்லப்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இறந்த செல்லப்பாவின் மனைவி ஜெகதாம்பாள் காவல் நிலையத்தில், சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் மீது புகார் அளித்ததின் அடிப்படையில் மதுராந்தகம் காவல்துறையினர் சரவணன் மற்றும் கோபிநாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் கவனக்குறைவு காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என மதுராந்தகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.