இங்கிலாந்தில் பெண் ஒருவர் வீட்டு குளியலறையின் தரைப்பலகையின் கீழ் 100 ஆண்டுகள் பழமையான கேட்பரி டைரி மில்க் சாக்லேட் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
எம்மா யங் என்கிற பெண் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான எம்மா 1930களில் கட்டப்பட்ட தனது வீட்டின் குளியலறையை புதுப்பிக்கும்போது வீட்டின் தரை பலகையின் கீழ் 100 ஆண்டுகள் பழமையான கேட்பரி டைரி மில்க் சாக்லேட் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். கழிவறை தரையை புதுப்பிக்க அதனை சுத்தம் செய்யும்போது குப்பைகளுக்கு இடையே இந்த சாக்லேட் கிடைத்துள்ளது. அந்த பிராண்டின் பழைய பேக்கிங் என்பதால் அதன் ஊதா நிறம் தவிர மற்ற அத்தனை அம்சங்களும் அதில் மாறி இருந்தது. பழைய கால ஃபாண்ட் வடிவில் அதில் கேட்பரி என எழுதப்பட்டிருந்தது. பெட்டி எந்த வகையில் பாழாகவில்லை என்பதால் அதனை அப்படியே அலமாரியில் வைக்கலாமா என யோசித்ததாக எம்மா யங் கூறினார். பழைய சாக்லேட் கிடைத்த ஆச்சரியத்தில் உறைந்து போன யங் அதனை தனது அலமாரியின் மேண்டில் பீஸில் வைத்து விட்டு அதன் வயதைக் கண்டறிய முயன்றிருக்கிறார். அது 1930-34ல் செய்யப்பட்டிருக்கலாம் என உறுதி செய்துள்ளார்.
இது குறித்து ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ள யங், “அதன் பேக்கிங் என்னை மிகவும் திகைக்க வைத்தது.ஒரு பக்கம் எந்தவித சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளது. இதனைக் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையானது என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.”எனக் கூறினார்.மேலும் பேசிய யங், “ அந்த சாக்லேட்டில், ‘கேட்பரிஸ் டெய்ரி மில்க் சாக்லேட் நியோபோலிடன்’ என்றும் ‘இங்கிலாந்தின் போர்ன்வில்லி வில்லேஜ் கார்டனில் தயாரிக்கப்பட்டது என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இது மிகவும் பழையதாக இருப்பதால் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்க கடினமாக உள்ளது. மற்றபடி ஒருபக்கத்தில் மட்டும் சாக்லேட்டை எலி கடித்துள்ளது. மற்றோரு பக்கத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளது” என்று கூறியுள்ளார்