மத்தியபிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானை ஒன்று 100 வயது எட்டியுள்ளது. இது உலகிலேயே மிகவும் வயதான யானை என்ற பெருமையை பெற்றுள்ளது.
நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினமாக யானை கருதப்படுகிறது. யானையின் சராசரி ஆயுட் காலம் 60 முதல் 70 ஆண்டுகள். ஆனால் 100 வருடங்களுக்கு மேல் யானையால் உயிர் வாழ முடியுமா? என்ற சந்தேகத்திற்கு சாட்சியாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு யானை உலகின் மிகவும் வயதானது என்ற பெருமையை பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பன்னா புலிகள் சரணாலயத்தில் வத்சலா என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இது தற்போது, 100 வயதை எட்டியிருக்கிறது. வத்சலா யானை கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறது. அங்குள்ள நிலம்பூரில் இருந்து 1971-ம் ஆண்டுதான் மத்திய பிரதேச மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருக்க பன்னா புலிகள் சரணாலய அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். வத்சலா சவுகரியமாக வசிப்பதற்கென்றே பிரத்யேக கூண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு சிறப்பு உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. வயது மூப்பு காரணமாக வத்சலாவின் கண் பார்வை பறிபோய்விட்டது. இருப்பினும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருக்கிறது. இதுவரை கேரள மாநிலத்திலுள்ள செங்களூர் தாட்சாயணி யானைதான் ஆசியாவிலேயே வயதான யானையாக கருதப்படுகிறது. அது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துவிட்டது. வயது மூப்பு காரணமாக 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி அந்த யானை இறந்தது. அப்போது அதன் வயது 89.
அதற்கு முன்பு தைவான் மிருகக்காட்சி சாலையில் வசித்த ‘இலின் வாங்’ என்ற யானைதான் உலகின் வயதான யானையாக கருதப்பட்டது. அது 86 வயதில் இறந்தது. தற்போது வரை செங்களூர் தாட்சாயணி யானைதான் உலகின் வயதான யானையாக கருதப்படுகிறது. இப்போது அந்த சாதனை வத்சலா வசமாகி உள்ளது. எனினும் வத்சலாவின் பிறப்பு பதிவுகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கேரளாவில்தான் வத்சலாவின் பிறப்பு தொடர்பான சான்று கள் இருக்கும் என்பதால் அதனை கண்டுபிடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வைக்க வனத்துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.