மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் வங்கி கணக்கில் பணம் வராதவர்களுக்கு மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, மகளிருக்கு மாதம் ரூபாய் 1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த 15ஆம் தேதியன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 கோடியே 6 லட்சம் பேர் இத்திட்டத்தில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் பெரும்பாலானோருக்கு ரூபாய் ஆயிரம் பணம் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது.
பணம் செலுத்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு பணம் சென்று சேரவில்லை. ஆனால், அவர்கள் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வரிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்திருக்கிறது. இதனால் பணம் வராத பெண்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இந்த தகவல் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. குறிப்பிட்ட அந்த வங்கிக் கணக்குகளில் பயனாளிகளின் ஆதாரங்களை இணைக்கப்படாததால் அந்த கணக்குகள் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை ஆதார் எண் இணைக்குமாறு வங்கித் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தாமதம் இன்றி பணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஆதார் எண் இணைக்கப்படாத பயனாளிகளுக்கு அஞ்சல் துறை மணி ஆர்டர் மூலமாக ஓரிரு தினங்களில் பணம் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணம் கிடைக்க பெறாத மகளிர் தங்களுக்கு விரைவில் பணம் கிடைக்கப் போகிறது என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.