தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சலால் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பருவகால மாற்றத்தால் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ.1,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோய் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்று ஆய்வு மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் இதுவரை 5,500க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 550 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சுத்தமான நீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை சுற்றிலும் உடைந்த பானை, தொட்டி, டயர், டியூப் போன்ற பயன்படுத்தப்படாத பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து, அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கொசு ஒழிப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.