தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன..

இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.. ஆனால் தேர்தல் வாக்குறுதியின் படி, மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.. இதனிடையே 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது..
எனினும் இந்த திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.. இதற்கிடையே பல்வேறு புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தியது.. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி பயில, மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் தொடங்கியது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து பேசி உள்ளார்.. அப்போது பேசிய அவர் “ குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்கிறீர்கள்.. அந்த தொகையை வழங்குவதும் உறுதி. சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம். விரைவில் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும். சொன்னபடி அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்..