பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரமாக மாதம் ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேருவதற்கு தனியாக வங்கிக்கணக்கு இல்லாத பெண்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் எளிதாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான வழிமுறைகளை கூட்டுறவுத் துறை கடந்த ஆண்டு மேற்கொண்டது. அதன்படி, லட்சக்கணக்கான பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி உள்ளார்கள்.
இதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைவதற்காக கூட்டுறவு வங்கிகளில் 8 லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் வங்கிக் கணக்கு தொடங்கினார்கள், அவர்களுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக ரூ.1,000 அரசாங்கத்திடம் இருந்து வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் கூட்டுறவுத் துறைக்கு மாதம் தோறும் ரூ.82 கோடி வட்டியில்லா சுழற்சி வருவாயாக வந்து சேர்வதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.
கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வைப்புத் தொகைகள் தான் கடனாக மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்பதால், மக்களிடம் இருந்து பெறப்படும் வைப்பு தொகைகளுக்கு வட்டிப் பணம் வழங்க வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். மகளிர் உரிமைத் தொகைக்காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் அரசாங்கம் வழங்கும் உரிமைத் தொகையானது வட்டியில்லா சுழற்சி நிதியாக எங்களுக்கு மாதம் தோறும் கூட்டுறவு வங்கிகளுக்கு கிடைத்து வருகிறது.
இப்படி கூட்டுறவு வங்கிகளில் வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகைக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேநேரம் மகளிர் உரிமை தொகை உள்பட தங்கள் பணத்தை அப்படியே சேமிக்க விரும்பும் பெண்களுக்காக கூட்டுறவு வங்கிகளில் 2023-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி ‘தமிழ் மகள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தொடர் வைப்புத்தொகை (ரெக்கரிங் டெபாசிட்) செலுத்துபவர்களுக்கு 8 சதவீதம் வட்டி கூட்டுறவுத்துறையால் வழங்கப்படுகிறது.
ஆண்டுக்கு 8 சதவீத வட்டி தரும் திட்டம் என்பதால், பெண்களில் 38 ஆயிரத்து 420 பேர் ‘தமிழ் மகள்’ திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதில் அவர்கள் ரூ.100 முதல் ரூ.500 வரை தொடர் வைப்புத்தொகை (ரெக்கரிங் டெபாசிட்) கட்டி வருகிறார்களாம். இதன் மூலம் அவர்களுக்கு பின்னாளில் கணிசமான தொகை கிடைக்கும் என்கிறார்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகள். வருகிற 2025 மார்ச் 31-ந்தேதிக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகை பெறும் 8 லட்சத்து 20 ஆயிரம் பெண்களில் 2½ லட்சம் பேரை ‘தமிழ் மகள்’ திட்டத்தில் இணைக்க கூட்டுறவு துறை இலக்கு நிர்ணயித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Read more ; மாணவர்களுக்கு அதிர்ச்சி…! அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு…!