ஜூன் மாதத்திற்குள் 10,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு பிறகு எத்தனையோ முத்திரையை பதிக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. புதுமைப் பெண், நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தங்கப்பதக்கம், உங்கள் பகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதல்வர் என பல திட்டங்கள் திமுகவால் தீட்டப்பட்டுள்ளது. மக்களிடம் செல், மக்களோடு மக்களுக்காக வாழ் என்பதுதான் கலைஞர் காட்டிய பாதை. நாங்கள் ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காக போராடுவோம். ஆட்சியில் இருக்கும் போது மக்களின் பயன்களை பூர்த்தி செய்வோம்.
அரசின் சேவைகள் எல்லாம் பொதுமக்களுக்கு எளிமையாக சேர விரும்பியதன் காரணம் தான் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் முதியோர் போன்றவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பெருமளவில் பயன்பெற்றுள்ளனர். 30 நாட்களில் எங்களுடைய நடவடிக்கையின் மூலமாக 3,50,000 பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் இந்த மக்களிடம் முதல்வர் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக விளங்கும் மக்களுடன் முதல்வர் திட்டம். அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 60,560 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வருகிற ஜூன் மாதத்திற்குள் ரூ.10,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றார்.