திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 12,48,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”விவசாயிகளிடத்தில் வாங்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார். கடந்த 10 ஆண்டுகளில் செய்யாத பணிகளையெல்லாம் திமுக அரசு செய்து வருகிறது. 12,48,000 குடும்ப அட்டைகள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வழங்கப்பட்டுள்ளது. 12,50,000 இறந்தவர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரிசி கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பங்களிப்புடன் நாளொன்றுக்கு சுமார் 6,000 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் வகையில் அரிசி ஆலைகள். எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது முற்றிலும் தவறான செய்தி, உண்மைக்கு புறம்பான செய்தியை அறிக்கை விட்டு வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல. கடந்த 10 ஆண்டு காலத்தில் நெல்லை சேமித்து வைக்க குடோன்களே கட்டவில்லை. எப்போது பார்த்தாலும் நெல்லை பாதுகாக்கவில்லை என சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். மழை பெய்தால் எந்த வண்டியும் போகாத வகையில் சாலை வசதி, மின்சார வசதி இல்லாத குடோன் ஒன்றை நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் கட்டியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் பையில் முன்னாள் முதலமைச்சரின் படம் தான் இருந்தது. பெருந்தன்மையுடன் அவர் படம் இருந்தாலும் பரவாயில்லை என சொன்னவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின். அரிசி கடத்தலை தடுப்பதற்காக ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பதற்கும், கேமராக்கள் பொருத்துவதற்கும், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சி போன்று செட்டிங் டெண்டர் இல்லாமல், ஓபன் டெண்டர், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலமாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படும். வாங்காத பொருட்களுக்கும் குறுஞ்செய்தி செல்வதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அவர் பேசினார்.