பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, வரும் மக்களவை தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகளுடன் இணைந்து களம் காண வியூகம் அமைத்து வருகிறது. ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக – பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் எந்த அணிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன், பிளவுபட்ட அதிமுக – பாஜக கூட்டணியை ஒன்று சேர்க்கும் முயற்சியில் சில தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்தன.
ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு அமித் ஷா அழைக்கவில்லை, மோடியின் தலைமையை ஏற்கும் எல்லோரும் கூட்டணிக்கு வரலாம் என்றே கூறியதாக தெரிவித்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெரிவித்தனர். இதற்கிடையே, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தங்களது அணி பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாகவும், விலகியிருப்பது ஈபிஎஸ் அணி தான் என்றும் கூறினார்.
இப்படி ஒரு பக்கம் இருக்க, மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் 30% வாக்குகளை பெற்றே தீர வேண்டும் என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம். வெற்றி பெற வாய்ப்பிருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 12 தொகுதிகளை அவர் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தான் அடையாளம் கண்டுள்ள வலுவான வேட்பாளர்களை களமிறக்கவும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.