கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனரா என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தருமபுரியை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியைச் சேர்ந்த பத்மா உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட எலந்தூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 3 பெண்கள் காணாமல் போயுள்ளனர். 5 ஆண்டுகளில் கொச்சி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதில், ஒரு பெண் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாததால் அவர்கள் காணாமல் போன வழக்கை கேரள போலீஸ் மீண்டும் கையில் எடுத்துள்ளது.
பத்மா உள்ளிட்ட 2 பெண்களை நரபலி கொடுத்த மந்திரவாதி ஷாபி, கடந்த 2018 முதல் வீட்டின் உரிமையாளர் பகவல் சிங் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் மேலும் சில நரபலி பூஜைகளை ஷாபி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். காணாமல் போன பெண்கள் என்ன ஆனார்கள் என தெரியாததால், மந்திரவாதி ஷாபியிடம் சிக்கி பலியானார்களா என்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 2 பெண்கள் நரபலி வழக்கில் சிறையில் உள்ள மந்திரவாதி ஷாபியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.