12 வயது மகளை பெற்ற தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது நண்பர்களையும் செக்ஸ் உறவிற்கு அனுமதித்த சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தாய்-தந்தை இருவரும், கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த சிறுமி தந்தையிடம் வளர்வதாக கூறப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தந்தை, சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தந்தையின் நண்பர் கண்ணனும் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியிடம் கண்ணன் நெருக்கமாக இருந்ததை அதே பகுதியைச் சேர்ந்த அரிசி கடை உரிமையாளர் முகமது ரபிக் என்பவர் பார்த்துள்ளார். பிறகு அவரும் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால், கர்ப்பமானதாக சிறுமி தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து, 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த நிலையில், மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி. பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில், மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.