கேரளாவை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவரது நடத்தையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டதால், அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பரிசோதனையில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி நடத்திய விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது அந்த சிறுமிக்கும், அவரது 18 வயது சகோதரருக்கும் தகாத உறவு இருந்ததும், இதனால் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்கள் மகளின் கர்ப்பத்தை மருத்துவமனை மூலம் கலைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, 12 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி பெற்றோர் சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரரான பெற்றோர் தரப்பில், ”தங்களின் மகள் கர்ப்பமாக இருப்பது பற்றி எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. இந்த வயதில் வயிற்றில் குழந்தையை சுமப்பது என்பது அவளுக்கு உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் கருவை கலைக்க அனுமதி வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.
இதையடுத்து, சிறுமிக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமியின் வயிற்றில் உள்ள கருவானது 34 வாரம் வளர்ந்து இருப்பது தெரியவந்தது. மேலும், கரு முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து நீதிமன்றம் சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக நீதிமன்றம் கூறுகையில், “கரு முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளது. கருப்பைக்கு வெளியே கரு வளர தயாராகி உள்ளது. இந்த சமயத்தில் கருவை கலைப்பது இயலாத ஒன்று.
இதனால் கருவை கலைப்பது சரியாக இருக்காது. குழந்தை பிறக்க அனுமதிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சிறுமியை அவரது சகோதரர் நெருங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். 36 வாரங்களுக்கு பிறகு அருகே உள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் குழந்தை பிறப்பதை உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.