SIM கார்டுகளில் சிலவை சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (NCSC) நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், பழைய SIM கார்டுகளை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மீறப்படக்கூடிய அபாயம்: வெளியான ஒரு அறிக்கையின் படி, சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பழைய SIM கார்டுகள் காரணமாக நாட்டின் பாதுகாப்பு மீறப்படக்கூடிய அபாயம் உள்ளது. SIM (Subscriber Identity Module) என்பது ஒரு சிறிய சிப் ஆகும், இது மொபைல் பயனாளரின் முக்கியமான தகவல்களை பதிவு செய்கிறது. இதில் பயனர் சாதனத்தின் மாடல், IMEI எண், இருப்பிடம், முகவரி, தொலைபேசி எண் போன்றவை அடங்கும். இந்த தகவல்கள் கசியும் பட்சத்தில், பயனரின் டிஜிட்டல் அடையாளம் இழக்கும் அபாயம் உள்ளது.
இருப்பினும், பழைய SIM கார்டுகளை மாற்றும் செயல்முறை சிக்கலானதாக இருக்கும் என்றும், இதில் பல தொழில்நுட்ப மற்றும் சட்ட சவால்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் NCSC தெரிவித்துள்ளது. இந்த சூழலில், Airtel, Jio, Vodafone Idea மற்றும் BSNL ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், பயனர்களின் பழைய SIM கார்டுகளை மாற்றுவதற்கான ஒரு தீர்மானமான திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது சுமார் 120 கோடி மொபைல் பயனாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலரிடம் மட்டுமே சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பழைய SIM கார்டுகள் உள்ளன. 2021 மார்ச்சில், தொலைத்தொடர்பு துறை (DoT) Unified Access Service License விதிகளை மாற்றி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாதுகாப்பற்ற விற்பனையாளர்களிடமிருந்து எந்த உபகரணமும் வாங்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. புதிய விதிகளின் படி, NCSC அனுமதிக்காமல் எந்த நிறுவனமும் தொலைத்தொடர்பு உபகரணங்களை வழங்கக்கூடாது.
2023-ஆம் ஆண்டின் Telecom Act படியும், தொலைத்தொடர்பு உபகரணங்களை நம்பகமான மூலங்களிலிருந்து மட்டுமே வாங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. சீன நிறுவனங்களான Huawei மற்றும் ZTE ஆகியவை இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், தடை செய்யப்படும் முன்பு, இந்த நிறுவனங்கள் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு SIM கார்டுகள் மற்றும் நெட்வொர்க் உபகரணங்களை வழங்கியிருந்தன.
இந்த NCSC விசாரணை, தொலைத்தொடர்பு துறை, உள்துறை மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து நடைபெற்று வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, வியட்நாம் மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த உத்தியோகபூர்வ விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே உபகரணங்களை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விற்பனையாளர்கள் இந்தியாவில் விற்பனை செய்ய NCSC ஆல் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.
Read more: கோடையில் தினமும் ஒரு வெங்காயம் பச்சையா சாப்பிடுங்க.. ஏகப்பட்ட நன்மைகள் கொட்டி கிடக்கு..!!