கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆறு ஏடிஎம்,கள் மற்றும் 50 கடைகள் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் குறித்தும், அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறித்தும், பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, சாலை மறியலில் பயணியர் ஈடுபட்டது பெரிய விஷயமாக மாற்றப்பட்டது. குறிப்பிட்ட அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், வார இறுதி, விடுமுறை உள்ளிட்ட தினங்களில் திட்டமிடப்படாத பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இரவு 11:00 மணிக்கு மேல், வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைக்கப்படும். நள்ளிரவு 12:00 மணிக்கு மேலும் பேருந்துகள் இயக்கப்படும் என நினைத்து, திடீரென 200, 300 பேர் வந்தால், அது எப்படி சாத்தியம். அதிகாலை நேரத்தில் பயணம் செய்வது என்பது ஆபத்தானது, விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தான், அந்த நேரங்களில் பேருந்து போக்குவரத்து தவிர்க்கப்படுகிறது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திருச்சிக்கு பேருந்துகள் இல்லை என்று பிரச்னை ஏற்பட்டது. ஆனால், அன்று தினமும் இயக்கக்கூடிய 133 பேருந்துகள் மட்டும் இல்லாமல், கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்பட்டன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகள், மற்ற போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலை முதல், கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,215 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன. இனியும் வதந்தி பரப்புவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிளாம்பாக்கத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த, மக்களின் கருத்துகள் கேட்டு, சரி செய்யப்பட்டு வருகிறது. ஆறு ஏ.டி.எம்.,கள் மற்றும் 50 கடைகள் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.