நைஜீரியாவில் சனிக்கிழமை (டிசம்பர் 21) கிறிஸ்தவ ஆலயங்களில் பரிசு பொருட்கள் வழங்கும்போது, இரண்டு இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவில், பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,தொண்டு நிறுவனங்கள் சார்பில் உணவு மற்றும் உடைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நைஜீரியா தலைநகர் அபுஜாவின், மைதாமா மாவட்டத்தில் உள்ள ஹோலி டிரினிட்டி கத்தோலிக்க தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை (டிசம்பர் 21) அதிகாலை நேரத்தில் உணவு மற்றும் உடைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
அப்போது பரிசு பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்தபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜோசபின் அடே கூறுகையில், கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சையின் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.
இதே போல் தெற்கு நைஜீரியாவின் ஒகிஜாவில் உள்ள அனம்ப்ரா மாநிலத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியா நாட்டில் பல்வேறு தேவாலயங்கள் மற்றும் தனிநபர்கள் கிறிஸ்துமஸை முன்னிட்டு இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதால் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டு பலர் பலியாகும் சம்பவம் இரண்டாவது முறையாக அரங்கேறியுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்குவதற்காக ஒரு அமைப்பு ஏற்பாடு செய்த கண்காட்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி பல குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதுபோன்ற நிகழ்வுகளின் போது பாதுகாப்பு அளவீடுகள் குறித்து இந்த சம்பவங்கள் கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன், அனுமதி பெறுவது கட்டாயம் என காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.
Read More: ஸ்மார்ட்வாட்ச் பட்டைகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயணங்கள் கண்டுபிடிப்பு..!! – ஆய்வில் அதிர்ச்சி