குரூப்-1சி முதல்நிலைத் தேர்வுக்கு ஜனவரி 13-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அலுவலர் (குரூப்-1சி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதியானவர்கள் 2023 ஜனவரி 13-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்கள் இருந்தால் ஜனவரி 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் மேற்காெள்ளலாம். முதல்நிலைத் தேர்வு 2023 ஏப்ரல் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் நடைபெறும். முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் வெளியிடப்படும். கல்வித்தகுதியாக இளநிலை, முதுநிலைப் பட்டத்துடன், பிஎட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் நிலைத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.
முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கான தேர்வு திட்டத்தின்படி, கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தாள் (பத்தாம் வகுப்புத் தரம்) விரித்துரைக்கும் வகையில் 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.