தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவது 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவது 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மட்டும் 11,176 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் அக்டோபர் 28ஆம் தேதி திங்கட்கிழமை, வழக்கமாக இயங்குகின்ற 2,092 பேருந்துகளுடன் 700 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். அக்டோபர் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, வழக்கமாக இயங்குகின்ற 2,092 பேருந்துகளுடன் 2,135 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
அக்டோபர் 30ஆம் தேதி புதன்கிழமை, வழக்கமாக இயங்குகின்ற 2,092 பேருந்துகளுடன் 2,085 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். வழக்கமாக இயங்குகின்ற 6,276 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே சென்னையிலிருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து மொத்தம் 1,176 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம்: மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, புதுச்சேரி, கடலூர், திருச்சி, சிதம்பரம், மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், மற்றும் தஞ்சாவூர் வரை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி வரை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகளும், திருச்சி, சேலம், கும்பகோணத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள்.
தீபாவளி பண்டிகையையொட்டி மூன்று நாட்கள் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் 5.83 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு திரும்பும் வகையில் நவம்பர் 2ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை 9,441 பேருந்துகள் இயக்கப்படும். கடந்தாண்டு சென்னையில் இருந்து 5 இடங்களில்சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டநிலையில் இந்த ஆண்டு மூன்று இடங்களில் இருந்து மட்டுமே சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.