இந்தோனேசியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 268-ஐ தொட்டது. இந்த நிலநடுக்கத்தில் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில் 5.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளில் இருந்து வெளியே ஓடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இதில், ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த நிலநடுக்கத்தில் 268 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் தலைவர் ஹென்றி அல்பியாந்தி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பாதிக்கப்பட்ட பகுதியில் கிராமங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் மீட்பு பணி பெரும் சவாலாக அமைந்துள்ளது. 58,000க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதில், பெருமளவில் குழந்தைகளே பலியாகியுள்ளனர். அவர்களில் பலர் பள்ளி செல்லும் குழந்தைகள்.
பிற்பகல் 1 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் அவர்கள் பள்ளி கூடங்களில் தான் இருந்துள்ளனர். நகர் முழுவதும் மின்கம்பங்கள் சாய்ந்ததில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. 22,000 வீடுகள் சேதமடைந்து உள்ளன”. என்று தெரிவித்துள்ளார்.