லிப்ரா புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் படம் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். Fat man ரவீந்தர் என்று பிரபலமான இவர் சென்ற ஆண்டு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டுதன் மூலம், இந்த தம்பதி மிகவும் பிரபலமடைந்தனர். சில தினங்களுக்கு முன் தான் இந்த தம்பதியினர் ஒரு வருட திருமண தினத்தை கொண்டாடினர்.
இந்நிலையில் 16 கோடி மோசடி புகாரில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அதில், கடந்த 2021 ஆம் ஆண்டு ‘தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என்பவர், தனக்கு அறிமுகமாகி, நகராட்சி திடக்கழிவுகளை திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகள் கூறி, போலியான ஆவணங்களை காண்பித்து, தன்னை நம்ப வைத்து ரூபாய் 16 கோடி வரை முதலீடு செய்ய வைத்து மேற்படி பவர் ப்ராஜெக்ட் திட்டத்தை ஆரம்பிக்காமலும் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாக மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் நேற்றைய தினம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.