கள்ளக்குறிச்சி கலவரத்தில் 16 வயது இளம் சிறார் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக பெற்றோர் தாக்கல் செய்த புகார் மனுவை அடுத்து, இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 300-க்கும் மேற்பட்ட வன்முறை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கடலூர் மற்றும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாதவசேரி கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை என்ற கூலி தொழிலாளி கடந்த 17ஆம் தேதி முதல் தனது மகனை காணவில்லை என தேடிவந்த நிலையில், அந்த 16 வயது இளம் சிறார் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று தனது மகன் 16 வயது சிறுவன் எனவும் சின்னசேலத்திற்கு மருந்து வாங்க சென்று விட்டு வரும் வழியில் அவனை கைது செய்துள்ளீர்கள் எனவும் மன்றாடியுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக தங்களது மகன் இளம் சிறார் எனவும் போலீசார் அவனின் வயதை மறைத்து வன்முறை குற்றவாளிகளுடன் மத்திய சிறையில் அடைத்துவிட்டதாகவும் சிறுவனின் மாற்றுச் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்து உரிய நியாயம் கிடைக்க வேண்டுமென புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி உத்தரவின் பேரில் காவல்துறையினர் நேற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனை அழைத்து வந்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்த நீதிபதி முகமது அலி நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த 16 வயது இளம் சிறாரை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார்.