ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியில் குடியிருப்பவர் முனியாண்டி. இவர் டிபன் கடை வைத்துள்ளார். இவரது மகன் முத்து (16) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய மாமா சந்தோஷ் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் செல்போன் ஒன்றை வாங்கி இருக்கிறார். 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய செல்போனை முத்து பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முத்து செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் மனோகருடன் வாலாஜா ரோடு ரயில் நிலையம் சென்றுள்ளார். வாணாபாடி அருகே அம்மூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது முத்துவின் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவரது பேண்ட் தீப்பிடித்தது.
எதிர் பாராத இந்த நிகழ்வால் அதிர்ச்சி அடைந்த முத்து மோட்டார் சைக்கிளை சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது லவ்மோதி கீழே விழுந்தார். இதில் முத்துவிற்கு தொடையில் தீக்காயமும் பைக்கில் இருந்து விழுந்ததில் தலையில் ரத்த காயமும் ஏற்பட்டது. மனோகரனுக்கும் அடிபட்டுள்ளது.
இருவரும் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் பற்றி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் வாங்கிய மொபைல் வெடித்து மாணவர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.