மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய 17 வயது சிறுவன், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 வாகனங்களை சுக்குநூறாய் நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவன் 17 வயது சிறுவன். இந்த சிறுவன் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கியுள்ளார். அப்போது சிறுவன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. போதையில் 50 அடி சாலையில் ஜேசிபி இயந்திரத்தை சிறுவன் வேகமாக இயக்கியுள்ளான்.
இதையடுத்து, சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த ஜேசிபி, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீது மோதி சுக்குநூறாய் சேதமடைந்தது. ஆனால், அதன் பிறகும் ஜேசிபி, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் உட்பட சுமார் 25 வாகனங்களை அடித்து நொறுக்கியது.
மேலும், இரும்பு கடை ஒன்றில் கட்டிலில் படுத்து ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக வந்த ஜே.சி.பி-யை சகட்டு மேனிக்கு ஓட்டி வந்த சிறுவன், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியுள்ளான். இதில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஜேசிபியை தாறுமாறாக ஓட்டிய சிறுவனை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.