நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்கள் நலனிலும் மக்கள் நீதி மய்யம் எந்த சமரசமும் செய்துகொள்ளாது. கமலில் கொள்கைகளுடனும், சிந்தனைகளுடன் ஒத்த கருத்து கொண்டவர்களுடன் தான் கூட்டணி அமைய முடியும்.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இந்த 2 நிபந்தனைகளுடன் யாரும் ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயங்கமாட்டோம். கூட்டணி தொடர்பாக ஒரு குழு அமைத்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.