கரூர் மாவட்டம் மண்மங்கலம் அடுத்த புஞ்சை கடம்பக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர், திருமண வரன் பார்ப்பதற்காக கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி மற்றும் பாலகுமார் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இவர்களது ஏற்பாட்டின் பேரில், நவம்பர் 12ஆம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் கோவையை சேர்ந்த ரேணுகா (36) என்பவரை ரமேஷுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்தத் திருமணத்தின் போது 6 சவரன் தாலிக் கொடி, ஒரு பவுன் தங்கத்தோடு, அரை பவுன் மோதிரம் மற்றும் ரூ.4 லட்சம் செலவு செய்து ரேணுகாவை ரமேஷ் திருமணம் செய்திருக்கிறார். இந்த திருமணத்திற்கு ரேணுகாவின் மற்றொரு அண்ணன், அவரது மனைவி, ரேணுகாவின் தங்கை நந்தினி ஆகியோர் மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திருமணம் நடந்த மறுநாளே, ரேணுகாவின் உடலில் சில மாற்றங்கள் இருப்பதை கணவர் ரமேஷ் அறிந்துள்ளார்.
இதுகுறித்து, ரேணுகாவிடமே கேட்டுள்ளார். அதற்கு, ரேணுகா சில பதில்களைக் கூறினாலும், ரமேஷுக்கு சந்தேகம் தீரவில்லை. இதனால், தொடர்ந்து ரேணுகாவை ரமேஷ் கண்காணித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரேணுகாவுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பழனிகுமார் என்பவர், ரேணுகா என நினைத்து பணம், நகைகளை எடுத்து வருவதாகக் கூறிவிட்டு, இன்னும் ஏன் எடுத்து வரவில்லை என பேசியுள்ளார்.
இதையடுத்து, போனை கட் செய்துவிட்டு ரமேஷ் விசாரிக்கத் தொடங்கியுள்ளார். அதில், ரேணுகாவுக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்து இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருப்பதும் பழனிகுமாருடன் 3 வருடம் தொடர்பில் இருந்து விட்டு, கோவையைச் சேர்ந்த ராஜ், முபாரக் ஆகியோருடன் ஓராண்டு தொடர்பில் இருந்து, பின்பு லோகநாதன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு சில நாட்களில் அங்கிருந்த பணம், நகைகளை எடுத்து வந்துவிட்டதாகவும், அதே தரகர்கள் மற்றும் திருமண மோசடி கும்பல் மூலம் தான் ஏமாந்ததும் ரமேஷுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, ரேணுகாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கான புகைப்பட ஆதாரங்களும் இருந்துள்ளது. எனவே, இது குறித்து போலீசில் புகார் அளிக்க ரமேஷ் முடிவு எடுத்துள்ளார். ஆனால், இதை தெரிந்து கொண்ட ரேணுகா, ரமேஷ் கொடுத்த தங்க நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து, ஜெகநாதன் என்பவர் ரமேஷை அலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.20 லட்சம் பணம், 20 பவுன் நகையும் கொடுத்து விட்டால் பிரச்சனை ஏதும் செய்யாமல் விலகிக் கொள்வதாகவும், இல்லாவிட்டால் உன்னை வேறு திருமணம் செய்ய விடமாட்டோம் என்றும், நீ வரதட்சணை கேட்டு ரேணுகாவை கொடுமை செய்ததாக புகாரளிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆனாலும், இதுகுறித்து ரமேஷ் உடனடியாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், ரேணுகாவை கரூர் பேரூந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, கோவை செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரேணுகாவை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.