வரும் 2024 – 25ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது மாணவர்களின் கல்வித்திறனை பாதிக்கிறது. அதேபோல், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கூடுதல் மன அழுத்தத்தையும் சந்திக்கின்றனர். இந்நிலையில், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் 10, 12ஆம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு, 2 பொதுத்தேர்வுகள் நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்த தேர்வு முறை வரும் 2024-25ஆம் கல்வியாண்டில் நடைமுறைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தேர்வை சிறப்பாக எழுதியதாக ஒரு மாணவர் நினைத்தால், அவருக்கு இரண்டாவது தேர்வு கட்டாயம் கிடையாது. மேலும், மாணவர்கள் இரண்டு தேர்வுகளை எழுத வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் பொதுத்தேர்வு 2024ல் நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பொதுத்தேர்வு 2025ஆம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறும்.
இரண்டு பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எதில் கிடைக்கிறதோ, அதை இறுதித் தேர்வாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேர்வு முறை குறித்து கடந்த 2023 அக்டோபர் மாதம் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.