இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா – பாகிஸ்தான் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. மேலும் இதன் இறுதி போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்கள் இருப்பதால் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை திட்டமிட்டு நடத்துவதில் ஐசிசி, பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் இந்தியாவில் விளையாடும்பட்சத்தில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி டெல்லி அல்லது சென்னை நகரங்களில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தானின் அரையிறுதிப்போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டி வடிவிலான ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் இந்ததொடர் இந்தியாவிற்கு முக்கியமானது என்பதால், இரு அணிகளும் பொதுவான மைதானங்களில் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் தனது மற்ற அனைத்து போட்டிகளையும் வங்கதேசத்தில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.