சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும் என்ற முதுமொழிக்கேற்ப தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தைத் தன் குடும்பத்திற்கும், நாட்டுக்கும் பயன்படும் வகையில் ஒவ்வொரு மனிதனும் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தின் ஒரு சிறு பகுதியைச் சேமிக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சேமிப்பில் நீங்கள் செலுத்தும் கவனத்தை விட ஒரு படி அதிக கவனத்தை அதிக வருமானம் பெற நீங்கள் செலவிட்டாலும் கூட, வருங்காலத்தில் உங்களுக்கு உதவக் காத்திருப்பது சேமிப்பு பணம் தான். ஆகையால் அதிக சம்பளம் வாங்க நீங்கள் முயற்சிப்பதில் தவறில்லை. தாராளமாக முயற்சி செய்யுங்கள். அதேநேரம் சேமிப்பையும் விட்டுவிடாதீர்கள் .
ஒருவருடைய வருமானத்தில் குறைந்தது 10 விழுக்காட்டையாவது கட்டாயம் சேமிக்கும் பொழுது, எதிர்பாராமல் ஏற்படும் அவசரத் தேவைகளின் போது அச்சேமிப்பு நமக்கு கைகொடுத்து உதவுகின்றது. சேமிப்பின் அவசியத்தைச் சுட்டிக்காட்டுவதில் எறும்புகள், தேனீக்கள் போன்றவை மனிதனுக்கு உதாரணமாக இருக்கின்றன.
குடும்பத்தில் உள்ள அனைவரும் வரவு செலவுகளை திட்டமிட்டு சிக்கனமாக செயல்படும் போது, அதிகமாகச் சேமிக்க முடிவதுடன், குழந்தைகளும், சேமிப்பின் அவசியத்தை உணர்கின்றனர். பெற்றோர் குழந்தைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை சொல்லிக் கொடுத்திட வேண்டும். சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையின் அடிப்படைக் கூறுகளாக மாறுகின்றன. சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்வதால் மட்டுமே, பொருளாதார ரீதியில் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியும்.
சேமிக்கும் பழக்கம் இதுவரை உங்களிடம் இல்லை எனில் இந்த புத்தாண்டு முதல் உங்கள் சேமிப்பை உடனேயே தொடங்குங்கள். அப்போதுதான் நீங்கள் ஆசைப்பட்ட பொருளை யாரையும் எதிர்ப்பார்க்காமல் உங்களாலேயே சொந்தமாக வாங்க முடியும். சின்ன சேமிப்புதான் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.
Read more ; அடேங்கப்பா.. ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த வீர தீர சூரன்..!! சாட்டிலைட் உரிமம் மட்டும் இத்தனை கோடியா?