2025 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக முதல் நாள் இரவு கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 2,000 காவலர்கள் மற்றும் 500 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
கடற்கரையில் கொண்டாட்டங்களுக்கு வருபவர்களுக்காக 10 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கடலில் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்படும். புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் 200 பேர் விபத்தில் உயிரிழக்கின்றனர்.
இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும் போது உயிரிழப்பில் முதன்மை மாநிலமாக புதுச்சேரி இருக்கிறது. அதனால், உச்சநீதிமன்றம் இதை சுட்டிக்காட்டி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி 11ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.
ஜனவரி 12ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். முதலில் வாகனம் ஓட்டுவோர் அணிய வேண்டும். சிறிது நாட்களுக்கு பிறகு வாகனம் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு நடந்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியதில்லை” என்றார்.
Read More : ”FIR வெளியானதற்கு நாங்கள் பொறுப்பல்ல”..!! மாணவி வழக்கில் அறிக்கை தாக்கல் செய்தது காவல்துறை..!!