கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே கடுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம், அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை. இதையடுத்துஇ கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி மற்றும் இரண்டாவது மகள் ஆகியோர் பிரிந்து சென்று விட்டனர்.
சுரேஷ்குமாருடன் அவரது மூத்த மகள் ஆர்த்தி (21) வசித்து வந்தார். இந்நிலையில், சுரேஷ்குமார் கடந்த 26ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் பூதப்பாண்டி போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சுரேஷ்குமாரின் மகள் ஆர்த்தியிடம் விசாரணை நடத்தியபோது, தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாகவும், சம்பவத்தன்று அதிக மது போதையில் வீட்டுக்கு வந்து படுத்த அவர் அப்படியே இறந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், சுரேஷ்குமார் இயற்கைக்கு மாறாக கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீஸார் சுரேஷ்குமாரின் மகள் ஆர்த்தியிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தந்தையை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “ஆர்த்தி நர்சிங் படித்திருக்கிறார். அவரது வீட்டு அருகில் வசிக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கு சுரேஷ் பாபு (40) என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். இருவரும் பழகுவதை அறிந்த தந்தை சுரேஷ்குமார் கண்டித்துள்ளார்.
சுரேஷ்குமார் இடையூறாக உள்ளதாக எண்ணிய ஆர்த்தியும் சுரேஷ் பாபுவும் சேர்ந்து, சுரேஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, குடிப்பழக்கம் கொண்ட சுரேஷ்குமாரை அதிகமாக மது குடிக்க வைத்து, பின்னர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று சுரேஷ் பாபு டாஸ்மாக்கில் இருந்து மது வாங்கிக் கொண்டு சுரேஷ்குமாருடன் சேர்ந்து வீட்டருகே மது குடித்துள்ளனர். சுரேஷ்குமாருக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்துள்ளார் சுரேஷ் பாபு.
மது போதையில் சுய நினைவு இழந்த சுரேஷ்குமாரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்துள்ளனர். பின்னர் சுரேஷ் பாபுவும், ஆர்த்தியும் சேர்ந்து சுரேஷ்குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள் காலையில் தனது தந்தை அதிக மது குடித்ததால் உயிரிழந்துவிட்டதாகக் கூறி அழுது புலம்பியுள்ளார் ஆர்த்தி. ஆர்த்தியின் நாடகம் பிரேத பரிசோதனையில் அம்பலமாகிவிட்டது. தந்தையை கொலை செய்த வழக்கில் மகள் ஆர்த்தி மற்றும் அவரது ஆண் நண்பர் சுரேஷ்பாபு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
Read More : இந்த விஷயங்களை மருத்துவர் உங்களிடம் சொல்லவே மாட்டார்..!! நீங்கள் தான் ஜாக்கிரதையா இருக்கணும்..!!